தூங்குகிறாரா ஐஜி..?: கேட்கிறது சென்னை ஐகோர்ட்..!
தூங்குகிறாரா ஐஜி..?: கேட்கிறது சென்னை ஐகோர்ட்..!

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நாராயணசாமி என்பவர், லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் மாநகர போலீஸ் கமிஷனருக்கு புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், “குமாரபாளையத்தில் எனக்கு சொந்தமான நிலத்தை சார்பதிவாளர் கார்த்திகேயன் மற்றும் மாவட்ட பதிவாளர் சுரேஷ்குமார் ஆகியோரின் துணையுடன் போலி ஆவணங்கள் மூலம் ரியல் எஸ்டேட் தரகர்கள் அபகரித்துள்ளனர்” என்று கூறியிருந்தார்.
இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்காததால், வழக்குப் பதிவு செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன், “முத்திரை கட்டணம் மற்றும் பதிவு கட்டணம் குறைப்புக்காக நிலத்தின் மதிப்பை குறைவாக காட்டியிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கையால் அரசுக்கு 4 லட்சம் ரூபாய் வரை இழப்பு எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம், பத்திரப்பதிவு ஐஜிக்கு, லஞ்ச ஒழிப்புத் துறையிடம் இருந்து பரிந்துரை அனுப்பப்பட்டது ஆவணங்கள் மூலம் தெரிகிறது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசிடம் விளக்கம் கேட்டு அறிக்கை அளிக்க அவகாசம் கோரினார்.
இந்த விஷயத்தில் ஓராண்டாக பத்திரப்பதிவு ஐஜி தூங்கிக் கொண்டிருப்பதாக தெரிகிறது. அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழான புகார்களில் இதுபோன்று செயல்படுவது கண்டனத்துக்குரியது” என உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

