ஜிகா வைரஸ் காற்றில் பரவும் தன்மை உள்ளதா ? - டாக்டர் மேத்யூ வர்கீஸ்
ஜிகா வைரஸ் காற்றில் பரவும் தன்மை உள்ளதா ? - டாக்டர் மேத்யூ வர்கீஸ்

“ஜிகா வைரஸ் காற்றில் பரவாது. நோய் பாதித்தவரை தொடுவதால் தொற்று ஏற்படாது. எனவே, மக்கள் அச்சப்படத் தேவையில்லை” என்று கேரள சுகாதாரத் துறை நிபுணர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, கேரள மாநில பொது சுகாதாரத் துறை நிபுணர் டாக்டர் மேத்யூ வர்கீஸ் கூறியுள்ளதாவது; “ஜிகா வைரஸ் 3 முதல் 14 நாட்கள்வரை உடலில் இருக்கும். பாதிப்பு ஏற்பட்ட 2 முதல் 7வது நாளில் அறிகுறிகள் காணப்படும். இதுவரை ஜிகா வைரஸுக்கு எந்தத் தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை.
அதிகமான ஓய்வு, திரவ உணவுகளைச் சாப்பிடுவது, உடல்வலி, காய்ச்சலுக்கான மருந்துகளை வழங்குவதுதான் இதற்கு மருத்துவம் என்று உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது. கொசுக்கள் நம்மை கடிப்பதைத் தவிர்ப்பதன் மூலம் ஜிகா வைரஸ் பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ள முடியும். கேரள மாநிலத்தில் இதுவரை 40க்கும் மேற்பட்டோருக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஜிகா வைரஸ் காற்றில் பரவாது. நோய் பாதித்தவரை தொடுவதாலும் தொற்று ஏற்படாது. இது கொசுக்களால் பரவுகிறது. ஜிகா வைரஸ் கொரோனாவிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தொற்று நோய். இப்போதைக்கு இதைப்பற்றி மக்கள் அச்சப்படத் தேவையில்லை. இதைக் கட்டுப்படுத்துவது கேரள சுகாதாரத் துறை மற்றும் தொற்றுநோய் தடுப்பு நிபுணர்கள் கையில் உள்ளது.
சுற்றுலா மையங்களில் சமீப காலமாக மக்கள் நடமாட்டம் சற்று அதிகமாகவே இருக்கிறது.சுற்றுலா மையங்களில் மக்களை அனுமதிக்கலாம். அவர்கள் நீண்ட காலம் வீட்டின் உள்ளேயே இருந்து மன அழுத்ததில் உள்ளனர். அவர்களின் மனநலன் கருதி பொது இடங்களில் அனுமதித்தாலும் கூட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். உணவகங்களில் கூட்டத்தை அனுமதிக்கக்கூடாது” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

