அனைத்து பள்ளிகளிலும் இது கட்டாயம்.. தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவு..!
அனைத்து பள்ளிகளிலும் இது கட்டாயம்.. தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவு..!

அனைத்து பள்ளிகளிலும் நூலக பாட வேளைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக பள்ளிக் கல்வித்துறை கமிஷனரகத்தில் இருந்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ‘அனைத்து பள்ளிகளிலும் வாரம் ஒரு முறை நூலக பாட வேளைகளை கட்டாயம் நடத்த வேண்டும் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

பல பள்ளிகளில் நூலகங்களின் பயன் மாணவர்களுக்கு கிடைக்காமல் உள்ளது. நூலக பாட வேளைகள் முறையாக நடத்தப்படுவதில்லை. எனவே, ஒவ்வொரு பள்ளியும் வாரம் ஒரு முறை நூலக பாட வேளைகள் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும். நூலகத்துக்கு தனி அறை ஒதுக்க வேண்டும்.
நூலக பாட வேளைகளில், மாணவர்கள் புத்தகங்களை படிப்பதுடன், வீட்டிற்கு எடுத்துச் சென்று படிக்கவும் அனுமதிக்க வேண்டும். இதற்கான பதிவேடு பராமரிக்க வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகத்தை படித்ததும், அவர்களுக்கு கட்டுரை, நூல் அறிமுகம் செய்தல் போன்ற போட்டிகள் நடத்த வேண்டும்.
விருப்பம் உள்ள மாணவர்களை தேர்வு செய்து, வாசகர் வட்டம் உருவாக்க வேண்டும். அருகில் உள்ள நூலகங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். புத்தக நன்கொடையாளர்களை அதிகரிக்க வேண்டும். தேவையான புத்தகங்கள் இல்லாவிட்டால், அருகில் உள்ள மாவட்ட மைய நூலகம் மற்றும் பிற நூலகங்களை அணுகி, மாணவர் வாசிப்புக்கு ஏற்ற புத்தகங்களை பெற்று பயன்படுத்தலாம்.
நூலகங்களில் நாளிதழ்களை படிக்கவும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்’ என அந்த சுற்றறிக்கையில் பல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

