ரூ.1க்கு இட்லி! கோவை 'இட்லி அம்மா'வுக்கு சொந்த வீடு!
ரூ.1க்கு இட்லி! கோவை 'இட்லி அம்மா'வுக்கு சொந்த வீடு!

கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கி, ஏழைகளின் பசியைத் தீர்த்து வந்த 'இட்லி அம்மா' கமலாத்தாளுக்கு மஹிந்திரா நிறுவனம் சொந்த வீடு வழங்க முன்வந்துள்ளது.
இது குறித்து முன்னர், மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா அவரது ட்விட்டர் பக்கத்தில், ஏழை எளிய மக்களும் பசியாற வேண்டும் என்பதற்காக கோவையில் விறகு அடுப்பு மூலம் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி என்று மலிவான விலையில் விற்பனை செய்து வந்த கமலாத்தாள் குறித்து புகழ்ந்திருந்தார்.
இந்த பதிவு வைரலானதைத் தொடர்ந்து, சமூக வலைத்தள வாசிகளிடையே 'இட்லி அம்மா' பரவலாக வரவேற்பைப் பெற்றார். அவரது சேவையும் பெரும் பாராட்டைப் பெற்றது. இதையடுத்து கோவையில் இயங்கி வருகிற பாரத் கேஸ் நிறுவனம், உடனடியாக கமலாத்தாளுக்கு இலவசமாக கேஸ் அடுப்பு வழங்கியது. அதன் பிறகும் தொடர்ந்து 1 ரூபாய்க்கு இட்லி கொடுத்து வந்த கமலாத்தாள், இந்த சேவையை அதிகமானோர்க்கு செய்ய வேண்டும் என்று விரும்பினார். தற்போது, மஹிந்திரா குழுமம் கமலாத்தாளுக்குச் சொந்தமாக நிலம் வாங்கி அவரது பெயரில் பதிவு செய்ய உதவியிருக்கிறது. அந்த நிலத்தில் கமலாத்தாளுக்கான வீடு மற்றும் இட்லி கடை நடத்துவதற்கான கட்டுமானத்தையும் அந்நிறுவனம் தொடங்கியிருக்கிறது.