பள்ளிகளை படிப்படியாகத் திறக்கும் நேரம் இது.. எய்ம்ஸ் புதிய தகவல் !!
பள்ளிகளை படிப்படியாகத் திறக்கும் நேரம் இது.. எய்ம்ஸ் புதிய தகவல் !!

கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் இன்னும் திறந்தபாடில்லை. இதனால் வீட்டிலேயே மாணவர்கள் முடங்கியுள்ளனர். கொரோனா 2ஆவது அலையை எதிர்கொண்ட நிலையில் மூன்றாம் அலை குறித்த எச்சரிக்கையும் எழுந்துள்ளது. இதனால் பல்வேறு தளர்வுகள் அளித்தாலும் பள்ளிகளைத் திறக்க மத்திய, மாநில அரசுகள் தயக்கம் காட்டி வருகின்றன.

கடந்த கல்வியாண்டில் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி அளிக்கப்பட்டது. தற்போது மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் பள்ளிகளை படிப்படியாக திறக்கலாம் என்றும் அதற்கான நேரம் வந்துவிட்டது என்றும் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், பரவல் விகிதம் 5 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ள மாவட்டங்களில் பள்ளிகளைத் திறக்கலாம். 5 சதவீதத்திற்கும் குறைவான நேர்மறை விகிதங்களைக் கொண்ட பள்ளிகளில் மாற்று நாள்களில் வகுப்புகளை பிரித்து மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்கலாம். இதனால் மாணவர்கள் நெருக்கமாக இல்லாமல் சமூக இடைவெளியில் இருப்பதை உறுதி செய்ய முடியும்.

அதேநேரத்தில், இதுகுறித்து மாணவ- மாணவிகள், பெற்றோர்களிடமும் அவர்களின் விருப்பத்தை ஆராய்ந்து பள்ளிகள் முடிவெடுக்க வேண்டும். ஒரு குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பள்ளிப்படிப்பின் முக்கியத்துவம் அவசியமானது. தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ளது குழந்தைகளிடையே மனதளவில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பல குழந்தைகள் இயற்கையாகவே கொரோனா தொற்றை எதிர்த்து போரிடும் நோயெதிர்ப்பு சக்தியை கொண்டிருக்கின்றனர். பள்ளிகளில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட அனைத்து சுகாதார நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும். ஒருவேளை கொரோனா பரவல் அதிகரித்தால் பள்ளிகளை உடனடியாக மூடவும் தயாராக இருக்க வேண்டும் என அவர் கூறினார்.
newstm.in

