"ஜம்மு -காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து" அமித்ஷா திட்டவட்டம் !
"ஜம்மு -காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து" அமித்ஷா திட்டவட்டம் !

"ஜம்மு -காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து" வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மத்தியில் பாஜக அரசு அமைந்த பின்பு ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. அதன்படி சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீரும், சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக்கும் உருவானது.
இதனைத்தொடர்ந்து, காஷ்மீரின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக வீட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் படிப்படையாக விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட மசோதா மீது மக்களவையில் காரசாரமாக விவாதம் நடைபெற்றது.இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஜம்மு- காஷ்மீர் மாநிலம் நீண்ட நாட்களாக தீவிரவாதம் காரணமாக பாதிக்கப்பட்டது.

ஜம்மு - காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். அந்த நாட்களை நான் மீண்டும் நினைத்து பார்க்க விரும்பவில்லை. அதுபோன்ற நாட்கள் இனி அங்கு மீண்டும் வராது. இதில் மத்திய அரசு மிகவும் உறுதியாக உள்ளது.
ஜம்மு -காஷ்மீர் விவகாரத்தை அரசியல் கட்சிகள் அரசியல் ஆக்கக் கூடாது. ஜம்மு காஷ்மீருக்கு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்றார். மேலும், ஜம்மு -காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் முறைகேடு ஏதும் நடைபெறவில்லை என விளக்கம் கொடுத்தார்.

