பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயக்குமார்!!
பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயக்குமார்!!

திமுக பிரமுகரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து அவர் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை, வண்ணாரப்பேட்டை 49ஆவது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் இளைய அருணா தலைமையில் திமுகவினர் அந்த வார்டுக்கு உட்பட்ட வாக்குசாவடிகளை கைப்பற்றி கள்ள ஓட்டுப்போட முயற்சிப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அதிமுகவினர் மற்றும் பாஜகவினர் அங்கு வந்தனர்.
அப்போது, இரண்டு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், திமுகவினர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஓட்டுநர் ஜெகன், பாஜக பிரமுகர் ராமையா ஆகியோரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள், திமுக நிர்வாகி நரேஷை தாக்கி, அரை நிர்வாணமாக இழுத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் திமுக நிர்வாகி நரேஷ் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் பேரில் தண்டையார்ப்பேட்டை போலீசார், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது கொலை மிரட்டல், பயங்கர ஆயுதங்களுடன் கலகத்தில் ஈடுபடுதல், ஆபாசமாக பேசுதல், பொதுச் சொத்தை சேதப்படுத்துதல் உட்பட 10 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை தண்டையார்பேட்டை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரை காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து நுங்கம்பாக்கம் காவல் நிலைத்தில் அவரை வைத்திருப்பதாக தகவல் கிடைக்கப் பெற்ற அதிமுக தொண்டர்கள் நுங்கம்பாக்கம் காவல் நிலையம் முன்பு கூடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை நள்ளிரவு 12 மணியளவில் எழும்பூர் நீதிமன்றத்தில், ஜார்ஜ்டவுன் 15வது நீதிமன்ற மேஜிஸ்ட்ரேட் முரளிகிருஷ்ணா முன்பு காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். மேஜிஸ்ட்ரேட் ஜெயக்குமாரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு தேவையான மருத்துவ உதவிகளையும் முதல் வகுப்பு சிறையில் அடைக்கவும் மேஜிஸ்ட்ரேட் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜெயக்குமார் பூவிருந்தவல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
newstm.in

