ஜெயலலிதா வசித்த வேதா நிலையம் சாவி தீபா - தீபக்கிடம் ஒப்படைப்பு..!
ஜெயலலிதா வசித்த வேதா நிலையம் சாவி தீபா - தீபக்கிடம் ஒப்படைப்பு..!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் நினைவு இல்லத்தின் சாவியை சென்னை ஆட்சியர் விஜயா ராணி, தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைத்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் எனும் வீட்டில் வசித்து வந்தார். இந்த இல்லத்தை நினைவிடமாக மாற்ற உள்ளதாக தமிழகத்தில் கடந்த 2017ம் ஆண்டு முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, அந்த இடத்தை தமிழக அரசு கையகப்படுத்தி, அரசுடைமை ஆக்குவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதை எதிர்த்து, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் அண்ணன் மகன் தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கில் கடந்த நவ.24ம் தேதி தீர்ப்பு வெளியாகியது. அதன்படி, வேதா நிலையத்தை அரசுடமையாக்கிய சட்டம் செல்லாது எனவும், மூன்று வாரத்தில் வேதா நிலையம் தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து, போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலைய நினைவு இல்லத்தின் சாவியை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் தீபா, தீபக் மனு அளித்தார். இதையடுத்து, வேதா நிலைய இல்லத்தின் சாவியை இன்று ஆட்சியர் விஜயா ராணி தீபா, தீபக்கிடம் ஒப்படைத்துள்ளார்.

