கச்சத்தீவு ஆலய திருவிழா இன்று தொடக்கம்.. 100 பக்தர்களுக்கு மட்டும் அனுமதி..!
கச்சத்தீவு ஆலய திருவிழா இன்று தொடக்கம்.. 100 பக்தர்களுக்கு மட்டும் அனுமதி..!

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று மற்றும் நாளை என 2 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழாவின் முதல் நாளான இன்று மாலை 5 மணி அளவில் ஆலயத்தின் முன் பகுதியில் உள்ள கொடிமரத்தில் அந்தோணியாரின் உருவம் பதித்த கொடி ஏற்றப்படுகிறது.
தொடர்ந்து, ஆலயத்தைச் சுற்றி 14 இடங்களில் சிலுவைப்பாதை திருப்பலி நடைபெறுகிறது. இரவு 8 மணியளவில் புனித அந்தோணியார் தேர் பவனி நடைபெறுகிறது.
திருவிழாவின் இரண்டாவது நாளான நாளை (12ம் தேதி) காலை 7 மணி அளவில் திருவிழா திருப்பலி தொடங்குகிறது. யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் தலைமையில் நடைபெறும் இந்த திருப்பலி 9 மணியுடன் முடிவடைகிறது.
கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு நடைபெறும் திருவிழாவில் இலங்கையிலிருந்து 50 பக்தர்களும், தமிழகத்தில் இருந்து 50 பக்தர்களும் கலந்து கொள்வதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இன்று நடைபெறும் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ராமேஸ்வரம் துறைமுக பகுதியில் இருந்து மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் படகுகளில் பக்தர்கள் கச்சத்தீவுக்கு புறப்பட்டு செல்கின்றனர் என தெரிவிக்கப்பட்டது.
கச்சத்தீவுக்கு செல்லும் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகுகளின் உறுதி தன்மை குறித்து மீன்துறை துணை இயக்குனர் காத்தவராயன் தலைமையில் மீன்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 3 விசைப் படகுகள் மற்றும் ஒரு நாட்டுப்படகு புறப்பட்டு சென்றுள்ளது. இதில், பாதிரியார்கள் உள்ளிட்டோர் கச்சத்தீவுக்கு சென்றுள்ளனர்.
இதையொட்டி, இந்திய கடலோர காவல் படை வீரர்கள் மண்டபம் முதல் தனுஷ்கோடி வரை ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

