கிஷோர் கே.சுவாமி மீது பாய்ந்தது குண்டாஸ்..!
கிஷோர் கே.சுவாமி மீது பாய்ந்தது குண்டாஸ்..!

அரசியல் தலைவர்கள், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்கள் பரப்பிய கிஷோர் கே சுவாமி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.
முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக கிஷோர் கே.சாமி மீது காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிசந்திரன் கடந்த 10ம் தேதி காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.
இந்த புகாரையடுத்து, 153- கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு செயல்படுதல், 505(1)( b)- அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக ஒரு குற்றத்தை செய்ய தூண்டுதல், 505( 1) (c) - ஒவ்வொரு வகுப்பு அல்லது சமூகத்தை வேறு சமூகத்துக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுதல் என மூன்று பிரிவுகளின் கீழ் சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜூன் 14ம் தேதி கிஷோரை கைது செய்தனர்.
இதனையடுத்து கிஷோர் கே சாமியை 28 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க தாம்பரம் கிளை கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இதன்பேரில், கிஷோர் கே சாமி சைதாபேட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்ட ஒரு சில நாளில் அவர் மீது நடிகை ரோகினி ஆன்லைன் மூலம் புகார் அளித்தார். அதில், கடந்த 2014ம் ஆண்டு கிஷோர் கே சாமி, அவரது வலைதள பக்கத்தில் மறைந்த நடிகர் ரகுவரன் மற்றும் தன்னைப் பற்றி இழிவுபடுத்தும் வகையில் கருத்தை பதிவிட்டிருந்தார். இந்த கருத்துகளால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாக தெரிவித்திருந்தார்.
இதே போல், பாஜக மூத்த தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், இல கணேசன், வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளை பதிவிட்டிருந்தார்..
இந்நிலையில், அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக கருத்து பதிவிட்ட கிஷோர் கே சுவாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

