சாட்டை துரைமுருகன் மீது குண்டாஸ்.. கிளைச் சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றம்..!
சாட்டை துரைமுருகன் மீது குண்டாஸ்.. கிளைச் சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றம்..!

கடந்த சில வாரங்களுக்கு முன்னர், காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கும் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையின் விடுதியில் வழங்கப்பட்ட தரமற்ற உணவை சாப்பிட்ட பெண்களில் 116 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, தரமற்ற உணவை உட்கொண்ட ஃபாக்ஸ்கான் நிறுவன பெண் ஊழியர்கள் ஒன்பது பெண் தொழிலாளர்கள் இறந்துவிட்டதாக வதந்தி பரப்பிய சாட்டை துரைமுருகன் கடந்த 20-ம் தேதி கைது செய்யப்பட்டு திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், அவரது ஜாமீன் மனு இன்று (3ம் தேதி) திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் அடிப்படையில் சாட்டை துரைமுருகன் குண்டர் மீது சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்டப்பிரிவு 153, 153A, 124A, 505(1), ED 3, பேரிடர் மேலாண்மை பிரிவு 53 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருவள்ளூர் கிளைச் சிறையில் இருந்து தற்போது புழல் மத்திய சிறைக்கு சாட்டை முருகன் மாற்றப்பட்டுள்ளார்.

