அப்பாவு மீதான நில அபகரிப்பு வழக்கு: நீதிபதி பரபரப்பு உத்தரவு! !!
அப்பாவு மீதான நில அபகரிப்பு வழக்கு: நீதிபதி பரபரப்பு உத்தரவு! !!

தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு மீதான நில அபகரிப்பு வழக்கின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் திமுகவைச் சேர்ந்த அப்பாவு. தற்போது சட்டப்பேரவை சபாநாயகராக உள்ளார். இந்த நிலையில், தொகுதியில் உள்ள பெருங்குடி கிராமத்தில் வழக்கறிஞர் தாமோதரன் என்பவர், தனக்கு சொந்தமான ரூ.80 லட்சம் மதிப்புள்ள 10 செண்ட் நிலத்தை பிச்சையம்மாள், சுப்பையா, சந்தானம் ஆகியோர் மூலம் அபகரித்ததாக தற்போதைய சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யாததால், திருநெல்வேலி நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், அப்பாவு, பிச்சையம்மாள், சுப்பையா, சந்தானம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி பாதிக்கப்பட்ட தாமோதரன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு செய்திருந்தார். இதனிடையே, இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கும்படி சபாநாயகர் அப்பாவு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்தார். விசாரணைக்கு பின் இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திலுள்ள எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், வழக்கின் நிலை குறித்து இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.
newstm.in

