காலையில் கடிதம்.. மாலையில் உத்தரவு.. இலங்கை சிறையில் இருந்து 55 தமிழக மீனவர்கள் விடுதலை !!
காலையில் கடிதம்.. மாலையில் உத்தரவு.. இலங்கை சிறையில் இருந்து 55 தமிழக மீனவர்கள் விடுதலை !!

தமிழக மீனவர்களை கைது செய்வதும், அவர்களின் படகுகளை இலங்கை கடற்படையினர் சேதப்படுத்துவதும் வாடிக்கையாகி வருகிறது. இதனை தடுக்க தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 18, 20 ஆகிய தேதிகளில் ராமேஸ்வரம் மற்றும் ஜெகதாபட்டினத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற போது, இலங்கை கடற்படையால் 55 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த படகுகளை அடுத்த மாதம் ஏலத்தில் விட அந்நாட்டு அரசு முடிவு செய்தது. இது தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 55 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.
தமிழக மீனவர்கள் விடுதலை தொடர்பான வழக்கு இன்று இலங்கையின் ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 55 மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்வதாக அறிவித்தனர். இதனால் அவர்கள் விரைவில் தாயகம் திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இன்று காலை தமிழக முதல்வர் ஸ்டாலின் இலங்கை அரசு தமிழக மீனவர்களின் படகுகளை ஏலத்தில் விடும் முடிவினை உடனடியாகக் கைவிட வலியுறுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in

