இனி, பிளாக்கில் மதுபானம் கிடைக்காது.. டாஸ்மாக் அதிரடி நடவடிக்கை..!
இனி, பிளாக்கில் மதுபானம் கிடைக்காது.. டாஸ்மாக் அதிரடி நடவடிக்கை..!

தமிழகம் முழுவதும் சுமார் 11 மதுபான உற்பத்தி நிறுவனங்கள், 9 பீர் உற்பத்தி நிறுவனங்கள், ஒரு ஒயின் உற்பத்தி நிறுவனம் மூலம் மதுபான வகைகள் தயாரிக்கப்பட்டு, டாஸ்மாக் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், “தமிழகத்தில், ஆயத்தீர்வை வரி லீக்கேஜ் மூலம் பெரும் இழப்பு ஏற்படுகிறது” என்று நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் கூறினார். இதன் தொடர்ச்சியாக, டாஸ்மாக் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மது பாட்டில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பார்கோடு அச்சிட்டு, மதுபானம் உற்பத்தி செய்யப்படும் இடம் தொடங்கி, விற்பனை செய்யும் இடம் வரை கணிணிமயமாக்கப்பட்டு கண்காணிக்கும் பணிகள் தொடங்க உள்ளது.
இதன் மூலம், ஒரு மதுபான பாட்டில் எங்கு, எப்போது தயாரிக்கபட்டது, எந்த கிடங்கில் எத்தனை நாட்கள் இருப்பு வைக்கப்பட்டது, அப்போது ஏதாவது முறைகேடு நடந்ததா, எந்த கடையில் எத்தனை மணிக்கு விற்பனை செய்யப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
இந்த நடைமுறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படும் மதுபான வகைகள் போலியா..? அது, எந்தக் கடையில் வாங்கப்பட்டது என்பதை எளிதாக கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

