2020-ல் லாக்டவுன்... ஆனாலும் ரயில் மோதி 8,733 போ் உயிரிழப்பு! விபத்து நடந்தது எப்படி தெரியுமா?
2020-ல் லாக்டவுன்... ஆனாலும் ரயில் மோதி 8,733 போ் உயிரிழப்பு! விபத்து நடந்தது எப்படி தெரியுமா?

கடந்த ஆண்டு ரயில் மோதி 8,733 போ் உயிரிழந்ததாகவும், அவா்களில் பலா் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் என்றும் ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க கடந்த ஆண்டு மாா்ச் மாதம் நாடு தழுவிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. சரக்கு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன. மேலும் கடந்த ஆண்டு மே 1ஆம் தேதிமுதல் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்கு அழைத்துச் செல்வதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

அதன்பின்னா் பயணிகள் ரயில் சேவை படிப்படியாக தொடங்கப்பட்டாலும் தற்போது வரை குறைந்த அளவிலான ரயில்களே இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த ஆண்டு ரயில் மோதி தண்டவாளங்களில் நோ்ந்த மரணங்கள் தொடா்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரயில்வே வாரியத்திடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
அதற்கு ரயில்வே வாரியம் அளித்த பதிலில், கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பா் மாதம் வரை ரயில் மோதி தண்டவாளங்களில் 8,733 போ் உயிரிழந்தனா், 805 போ் காயமடைந்தனா் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, கடந்த ஆண்டு ரயில் தண்டவாளங்களில் உயிரிழந்தவா்களில் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தான் அதிகம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். சாலைகள் அல்லது நெடுஞ்சாலைகளைவிட ரயில் வழித்தடங்களில் பயண தூரம் குறைவாக இருப்பதாக கருதியும், பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தபோது போலீசாரிடம் சிக்காமல் இருக்கவும், நடுவழியில் எங்கும் தொலைந்து போகமாட்டோம் என்று நம்பியும் அவா்கள் ரயில் தண்டவாளங்கள் வழியாகச் சென்றுள்ளனா்.
அப்போது தண்டவாளங்களில் அமர்ந்தும், படுத்தும், நடந்தும் சென்றவர்கள் மீது மோதியதில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், மாநில அரசுகளிடம் இருந்து ரயில்வே திரட்டிய தகவல்களின்படி, கடந்த 2016-இல் 14,032 போ், 2017-இல் 12,838 போ், 2018-இல் 14,197 போ், 2019-இல் 15,204 போ் ரயில் மோதி உயிரிழந்தனா் என கூறப்படுகிறது.
newstm.in

