ஆதாருடன் வாக்காளர் பட்டியலை இணைப்பதற்கான மசோதா மக்களவையில் நிறைவேற்றம் !
ஆதாருடன் வாக்காளர் பட்டியலை இணைப்பதற்கான மசோதா மக்களவையில் நிறைவேற்றம் !

தேர்தல் சீர்திருத்த மசோதா எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களவையில் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு அறிமுக நிலையிலேயே எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்த மசோதாவில் ஆபத்தான அம்சங்கள் இருப்பதாகவும் அப்போது குற்றம்சாட்டினர்.
இதனிடையே, மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ மக்களவையில் இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசியதாவது, ஏற்கனவே வாக்காளா் பட்டியலில் பெயா் பதிவு செய்திருந்தாலும் அவா்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தவும், வெவ்வேறு தொகுதிகளில் உள்ள வாக்காளா் பட்டியலில் அல்லது அதே தொகுதியில் வெவ்வேறு இடங்களில் உள்ள வாக்காளா் பட்டியலில் அவா்களின் பெயா் இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதற்கு மட்டுமே ஆதார் எண்ணை அதிகாரிகள் கேட்க முடியும்.

ஆதார் எண்ணைத் தர இயலாத நிலையில் இருப்பவா்களை வாக்காளா்களாக சோ்த்துக் கொள்ள மறுப்பு தெரிவிக்காது. தற்போதைய தேர்தல் சட்ட விதிகளின்படி பள்ளிகளில் மட்டுமே வாக்குச்சாவடிகளை அமைக்க முடியும். இனி கூடுதலாக தேர்தல் ஆணையம் விரும்பும் பொது இடங்களில் வாக்குச் சாவடிகள் அமைத்துக் கொள்ள அதிகாரம் வழங்கும் வகையில் புதிய மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ராணுவத்தில் பணியாற்றும் பெண், வாக்குப்பதிவின்போது ஊரில் இல்லாவிட்டால் அவருக்கு பதில் அவரது கணவர் வாக்களிக்க இந்த மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி சட்டப் பிரிவில் ‘மனைவி’ என்ற வார்த்தைக்கு பதில் வாழ்க்கை துணைவா் என்ற வார்த்தை சேர்க்கப்படுகிறது என தெரிவித்தார்.

தேர்தல் சட்ட திருத்த மசோதாவிற்கு காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களவையில் எழுந்து நின்று அவர்கள் அரசின் நடவடிக்கைக்கு எதிராக குரல் எழுப்பினர். இந்த மசோதா இந்திய குடிமகனின் அடிப்படை உரிமைக்கு எதிரானது என்றும், ஆதார் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தெரிவித்தனர்.
புதிய சட்ட திருத்த மசோதாவை பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் இந்த மசோதா நிறைவேறியது. கடும் அமளி காரணமாக மக்களவை நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டது.
newstm.in

