வயோதிபத்தில் வாட்டிய தனிமை.. 65 வயது மூதாட்டியை கரம் பிடித்தார் 85 வயது முதியவர்..!
வயோதிபத்தில் வாட்டிய தனிமை.. 65 வயது மூதாட்டியை கரம் பிடித்தார் 85 வயது முதியவர்..!

மைசூருவில் 65 வயது மூதாட்டியை 85 வயது முதியவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் முதியவரின் 9 பிள்ளைகள், மருமகள்கள், மருமகன்கள், பேரக்குழந்தைகள் முன்னிலையில் நடந்தது.
கர்நாடக மாநிலம் மைசூரு டவுன் உதயகிரி கவுசியா நகரில் வசித்து வருபவர் முஸ்தபா (85). இறைச்சிக் கடை உரிமையாளரான இவருடைய மனைவி குர்ஷித் பேகம். இந்தத் தம்பதிக்கு 9 பிள்ளைகள். அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது.
அனைவரும் தனித்தனியாக தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதனால், முஸ்தபா தனது மனைவி குர்ஷித் பேகத்துடன் தனிமையில் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு குர்ஷித் பேகம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் முஸ்தபா தனிமையில் வசித்து வந்தார். வயோதிகம் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் தனக்கு ஒரு துணை தேவை என்று உணர்ந்தார்.
இதையடுத்து அவர், அதே பகுதியில் தனிமையில் வசித்து வந்த பாத்திமா பேகம் (65) என்ற மூதாட்டியை சந்தித்தார். இருவரும் நன்றாக பழகி வந்தனர். இந்த நிலையில், உன்னை எனக்கு பிடித்திருக்கிறது; நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழலாம் என்று பாத்திமா பேகத்திடம் முஸ்தபா கூறினார்.
முதிர்ந்த வயதில் இது தேவைதானா? என்று பலரும் கிண்டல் செய்த நிலையில், முஸ்தபாவின் காதலை பாத்திமா பேகம் ஏற்றுக் கொண்டார். மேலும், திருமணம் செய்து கொள்ளவும் சம்மதம் தெரிவித்தார்.
இவர்களது திருமணத்திற்கு முஸ்தபாவின் மகன்கள், மருமகள்கள், மகள்கள், மருமகன்கள், பேரக்குழந்தைகள் என அனைவரும் சம்மதம் தெரிவித்தனர். மேலும், அவர்களே முன்னின்று முஸ்தபாவுக்கும் பாத்திமா பேகத்திற்கும் திருமணம் நடத்தி வைத்தனர்.
கொரோனா பரவல் காரணமாக இவர்களது திருமணம் முஸ்தபாவின் வீட்டில் எளிமையான முறையில் நடந்தது. பின்னர் புதுமண தம்பதியிடம், அனைவரும் ஆசி பெற்றனர். இந்த சம்பவம் மைசூருவில் பரபரப்பாக பேசப்பட்டது.

