Theme Check

ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சம் இழப்பு.. துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை..!

ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சம் இழப்பு.. துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை..!

ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சம் இழப்பு.. துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை..!
X

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள மேல துலுக்கன் குளம் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து (29). இவருடைய மனைவி சாலை தில்லை நாயகி (25). இந்தத் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 2013-ம் ஆண்டு காவல்துறையில் பணிக்கு சேர்ந்த காளிமுத்து, கோவை நகர ஆயுதப் படையில் காவலராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், கோவை காந்திபுரம் அரசு பொருட்காட்சியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டு இருந்த காவல் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காளிமுத்து, அங்கு வைக்கப்பட்டிருந்த எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார். துப்பாக்கி குண்டு அவரது வலது பக்க வயிற்றில் துளைத்து பின் வழியாக வெளியேறியது. அவர் ரத்தவெள்ளத்தில் கிடந்தார்.

துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதால் அருகில் உள்ள அரங்கில் இருந்தவர்கள் பதறியடித்துக் கொண்டு ஓடிவந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த காளிமுத்துவ மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.

துப்பாக்கி குண்டு அவரது சிறுநீரகத்தைத் துளைத்ததில் ரத்தம் அதிக அளவில் வெளியேறி இருந்தது. இன்று அதிகாலை 1 மணியளவில் சிகிச்சை பலனின்றி காளிமுத்து இறந்தார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது மனைவி சாலை தில்லைநாயகியிடம் ஒப்படைக்கப்பட்டது.

போலீஸ் விசாரணையில், காளிமுத்து ஆன்லைனில் ரம்மி சூதாட்டம் ஆடியுள்ளார். ஆரம்பத்தில் சிறிதளவு பணத்தை இழந்த அவர், அதை விளையாடி மீட்டு விடலாம் என்று தொடர்ந்து விளையாடி உள்ளார்.

இதற்காக தனது நண்பர்களிடம் ரூ.20 லட்சம் கடன் வாங்கி, பணத்தை இழந்துள்ளார். கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து காவலர் தற்கொலை செய்து கொண்டது கோவையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story
Share it