மடிப்பாக்கம் திமுக பிரமுகர் கொலை.. அதிமுக நிர்வாகி உட்பட இருவர் கைது..!
மடிப்பாக்கம் திமுக பிரமுகர் கொலை.. அதிமுக நிர்வாகி உட்பட இருவர் கைது..!

சென்னை மடிப்பாக்கம் 188-வது திமுக வட்டச் செயலாளராக இருந்தவர் செல்வம் (45). ராஜாஜி நகரில் உள்ள இவரது அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தார்.
இரவு 9 மணியளவில், அருகில் உள்ள ராமச்சந்திரா தெருவில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் செல்வத்தை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியது.
இதில், ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்த செல்வத்தை அக்கம்பக்கத்தினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தேர்தல் பிரச்னையா அல்லது தொழில் போட்டியில் இந்த படுகொலை நடந்ததா என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினர்.
அத்துடன், இந்த கொலை சம்பவம் தொடர்பாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், செல்வம் படுகொலை தொடர்பாக திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடியில் வைத்து ராதாகிருஷ்ணன், கார் டிரைவர் தனசீலன் ஆகிய இருவரை சமயபுரம் போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் அதிமுக அம்மா பேரவை மாவட்டச் செயலாளராக உள்ளார். அத்துடன், சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இவர், கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

