மதுரை பெரியார் பேருந்து நிலையம் இன்று திறப்பு!!
மதுரை பெரியார் பேருந்து நிலையம் இன்று திறப்பு!!

மதுரையில் 175 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பெரியார் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்தும் பகுதியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.
மதுரையில் கடந்த 2018 இறுதியில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் பெரியார் பேருந்து நிலையத்தை புதுப்பிக்க திட்டமிடப்பட்டது. அதனை தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பேருந்து நிலையம் முழுமையாக இடிக்கப்பட்டது.
175 கோடி ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் மிக பிரம்மாண்டமாக இதன் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. 57 பேருந்துகள் நிறுத்தும் அளவில் பேருந்து நிலையமும்,450 கடைகள் இயங்கும்படி வணிக வளாகமும் கட்டப்பட்டு வருகின்றன.
பேருந்து நிலையத்தின் தரை தளத்தின் கீழே 2 அடுக்குகளில் 5000 இரு சக்கர வாகனங்களும், 350 நான்கு சக்கர வாகனங்களும் நிறுத்தும் அளவிற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.மேலும், பயணிகள் காத்திருப்பு பகுதி, லிப்ட், நகரும் படிக்கட்டுகள், சுரங்கப்பாதை ஆகியவையும் கட்டமைக்கப் படுகின்றன.

இந்த பேருந்து நிலையத்திற்கு கூடுதல் அழகு சேர்க்கும் விதமாக வளாக சுவர்கள் முழுவதும் மதுரையின் நினைவுகளையும், பெருமைகளையும் போற்றும் வகையில் ஒரு அழகியல் முன்னெடுப்பை 'India media house' என்ற நிறுவனத்தின் மூலமாக மதுரை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.
இந்த பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்தம் செய்யும் பகுதியினை மட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார். அத்துடன், பெரியார் பேருந்து நிலையம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா மையத்தையும் திறந்து வைக்கிறார்.
newstm.in

