மேற்கு வங்கத்தில் மீண்டும் மம்தா பானர்ஜி ஆட்சி தான்.. பாஜகவுக்கு எத்ததனை இடம்- வெளியான கருத்துக் கணிப்பு !!
மேற்கு வங்கத்தில் மீண்டும் மம்தா பானர்ஜி ஆட்சி தான்.. பாஜகவுக்கு எத்ததனை இடம்- வெளியான கருத்துக் கணிப்பு !!

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது. இதில் மேற்கு வங்கத்திற்கு மட்டும் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
அந்த மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா, காங்கிரஸ்- கம்யூனிஸ்டு கூட்டணி ஆகியவற்றுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. ஆட்சியை பிடிக்க ஒவ்வொரு கட்சியும் முனைப்பு காட்டி தீவிரமாக போராடி வருகின்றன.

இந்தநிலையில் மேற்கு வங்கத்தில் எந்த கட்சிக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்று சி-ஓட்டர் நிறுவனமும், ஏ.பி.பி. நிறுவனமும் இணைந்து கருத்து கணிப்பு நடத்தின. நேற்று அந்த கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.
அதில், மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மேற்கு வங்க மக்களிடம் அதிக செல்வாக்கு இருப்பது கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. 3ஆவது முறையாக மம்தா பானர்ஜி ஆட்சி அமைப்பார் என்றும் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 148 முதல் 164 இடங்களை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே தனிப்பெரும்பான்மை பலத்துடன் மம்தா பானர்ஜி ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியுடன் காங்கிரஸ் இந்த தடவை கூட்டணி அமைத்து உள்ளது. இந்த கூட்டணியில் இஸ்லாமிய கட்சி ஒன்றும் இணைந்து உள்ளது. என்றாலும் இந்த கூட்டணிக்கு அதிகபட்சமாக 39 இடங்களே கிடைக்கும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனால் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளுக்கு கடும் இழப்பு ஏற்படும் என்று தெரிகிறது. அதேசமயத்தில் பா.ஜனதா கட்சி 92 முதல் 108 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மேற்கு வங்க அரசியலில் பா.ஜனதா கட்சி வலிமையான எதிர்க்கட்சியாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் கருத்து கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேநிறுவனம் தமிழகத்தில் நடத்திய கருத்து கணிப்பில் திமுக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
newstm.in

