கடைசி வரை போராடிய மனிஷ் பாண்டே.. கெத்து காட்டிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் !!
கடைசி வரை போராடிய மனிஷ் பாண்டே.. கெத்து காட்டிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் !!

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 2ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தாவின் இன்னிங்ஸை தொடங்கிய நிதிஷ் ரானா ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் ஷுப்மன் கில் 13 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரஷீத் கான் ஓவரில் கிளீன் போல்ட் ஆனார்.
இதன் பின்னர் நிதிஷ் ராணாவுடன் இணைந்தார் ராகுல் திரிபாதி. இருவரும் இணைந்து எதிர் தரப்பு பந்து வீச்சை பதம் பார்த்து ரன் விகிதத்தை உயர்த்தினர். ராகுல் திரிபாதி 28 பந்துகளில் 2 சிக்சர்களும், 5 பவுண்டரிகளுடன் அரை சதம் கண்டார். அதேபோல் ராணாவும் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். பின்னர் திரிபாதி 53 ரன்களுக்கு ஆட்டமிழந்து நடையைக் கட்டினார்.

இதன் பின்னர் வந்த ஆண்ட்ரே ரஸ்ஸல், இயான் மார்கன் ஆகியோர் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்காமல் விக்கெட்டை இழந்தனர். சதம் அடிப்பார் என எதிர்பார்த்த ராணா 80 ரன்களில் ஆட்டமிழந்தார். டெத் ஓவர்களில் மிரட்டிய தினேஷ் கார்த்திக் 9 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 22 ரன்கள் குவித்து கொல்கத்தா அணியின் ரன் ரேட்டை உயர்த்தினார்.
இறுதியாக 20 ஓவர்களில் 6 விக்கெட்களுக்கு 187 ரன்கள் குவித்தது கொல்கத்தா அணி. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில் முகமது நபி, ரஷீத் கான் தலா இரண்டு விக்கெட்களையும், புவனேஷ்வர் குமார், நடராஜன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கியது. விருத்திமான் சாஹாவும், டேவிட் வார்னரும் களமிறங்கினர். அதிரடி ஆட்டக்காரரான டேவிட் வார்னர் 2வது ஓவரிலேயே விக்கெட்டை பறிகொடுத்தார். பிரசித் கிருஷ்ணா ஓவரில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்திக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சாஹா 7 ரன்களுக்கு ஷகிப் அல் ஹசன் ஓவரில் கிளீன் போல்டானார். 3 ஓவர்களுக்கு ஹைதராபாத் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்து பரிதாபமாக காட்சியளித்தது.

இதன் பின்னர் களத்திற்கு வந்த மனிஷ் பாண்டே, பேர்ஸ்டோ அரைசதம் அடித்து ஹைதராபாத் அணிக்கு நம்பிக்கை அளித்தனர். மனிஷ் பாண்டே இறுதி வரை ஆட்டமிழக்காமல் வெற்றி பெற வைக்க போராடினார். அவர் 61 ரன்களுடன் களத்தில் இருந்தார். இறுதியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்களுக்கு 5 விக்கெட்களுக்கு 177 ரன்கள் எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
newstm.in

