நாட்டில் மருத்துவ படிப்புகள் வணிகமயமாகிவிட்டது- உச்சநீதிமன்றம் வேதனை !!
நாட்டில் மருத்துவ படிப்புகள் வணிகமயமாகிவிட்டது- உச்சநீதிமன்றம் வேதனை !!

நாட்டில் மருத்துவப்படிப்புகள் முழுமையாக வணிகமயமாகிவிட்டதாக உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புக்கான நீட் பாடத்திட்டத்தை மத்திய அரசு கடைசி நேரத்தில் மாற்றியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாட்டில் மருத்துவப்படிப்புகள் முழுமையாக வணிகமயமாகிவிட்டது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

மேலும் நீட்-எஸ்எஸ் தேர்வை மாற்றிக் கொண்டு இருப்பது நாட்டின் மருத்துவக் கல்வி தரத்திற்கு உகந்த செயல் அல்ல. நவம்பரில் நடைபெற வேண்டிய தேர்வுக்கு ஆகஸ்ட் மாதம் பாடத் திட்டத்தை மாற்றம் செய்கிறார்கள். மாணவர்கள் மனு தாக்கல் செய்தவுடன் ஜனவரி மாதம் தேர்வை ஒத்திவைக்கிறார்கள். இவை எதுவும் நாட்டில் மருத்துவப் படிப்பிற்கு நல்லதாக தெரியவில்லை.
நாட்டில் மருத்துவப் படிப்புகள் முழுமையாக வணிகமயமாகிவிட்டது. மருத்துவக் கல்வியும் ஒழுங்காற்று விதிகளும் வணிகமயமாகிவிட்டன.மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு இடங்களை நிரப்பவே அவசரம் காட்டப்படுகிறது.தனியார் கல்லூரிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு இடங்கள் காலியாக இருந்துவிடக் கூடாது என்ற நோக்கம் தெரிகிறது.

பல ஆண்டுகளாக தேர்வுக்குத் தயாராகிவரும் மருத்துவர்களுக்கு வினாத்தாள் மாற்றம் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது, என்று நீதிபதிகள் காட்டமாக தெரிவித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
newstm.in

