அமைச்சர் சாமிநாதன் தாயார் மரணம்.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!
அமைச்சர் சாமிநாதன் தாயார் மரணம்.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனின் தாயார் தங்கமணி அம்மாள், வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 89.
தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் திருப்பூர் மாவட்டம் முத்தூரைச் சேர்ந்தவர். விவசாயக் குடும்ப பின்னணியை கொண்ட இவருக்கு அங்கு பூர்வீக தென்னந்தோப்பு உட்பட விவசாய நிலங்கள் இருந்து வருகின்றன.
விவசாயப் பணிகளில் அதிக ஆர்வம் கொண்ட அமைச்சரின் தாயார் தங்கமணி அம்மாள் அவற்றை கவனித்துக் கொண்டு முத்தூர் கிராமத்திலேயே வசித்து வந்தார்.
வயது மூப்பு காரணமாக கடந்த சில நாட்களாக உடல் நலிவுற்ற நிலையில் வீட்டில் முழு ஓய்வில் இருந்து வந்த அமைச்சரின் தாயார் தங்கமணி அம்மாள் இன்று (25-ம் தேதி) உயிரிழந்தார்.

அமைச்சர் சாமிநாதனின் தாயார் மறைவு செய்தி அறிந்த முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தாயார் தங்கமணி அம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்பதை அறிந்து வருந்துகிறேன்.
தன்னை இத்தனை ஆண்டுகாலம் போற்றி வளர்த்த, தன் வளர்ச்சியைக் கண்டு உவகையும் பெருமையும் கொண்ட அருமைத் தாயாரை இழந்து நிற்கும் அமைச்சர் சாமிநாதன் அவர்களின் துயரத்தில் நானும் பங்கெடுக்கிறேன்.
அன்னையின் இழப்பால் மனம் அல்லலுற்றுள்ள செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

