முகமது ஷமி குறித்த அவதூறு பதிவுகளை நீக்கம்... ஃபேஸ்புக் அதிரடி !!
முகமது ஷமி குறித்த அவதூறு பதிவுகளை நீக்கம்... ஃபேஸ்புக் அதிரடி !!

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை இழிவுபடுத்தி எழுதப்பட்ட பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் சமூகவலைத்தளம் தெரிவித்துள்ளது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிராக போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதற்கு ஒரு தரப்பினர் இந்தியா தோல்விக்கு முகமது ஷமி தான் காரணம் என சமூக வலைத்தளங்களில் தரமற்ற முறையில் விமர்சிக்கத் தொடங்கினர். அவரை மத ரீதியாகவும் விமர்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஷமியின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் நூற்றுக்கணக்கான பேர் ஷமியைத் துரோகியாகச் சித்தரித்து மத ரீதியிலான பதிவுகள் எழுதியுள்ளார்கள். இந்திய அணிக்குத் துரோகம் செய்ததால் அவரை அணியிலிருந்து நீக்கவேண்டும் என்றும் தரமற்ற முறையில் கேலி செய்தனர்.
ஆனால், ஒரு தரப்பு ரசிகர்களின் இதுபோன்ற கேவலமான செயலுக்கு சச்சின் டெண்டுல்கர், ஷேவாக் உள்பட முன்னாள், இன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்து ஷமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். அதேபோல் ராகுல்காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் முகமது ஷமிக்கு ஆதரவாக நின்றனர்.

இந்நிலையில் ஃபேஸ்புக் சமூகவலைத்தளத்தில் ஷமிக்கு எதிராகவும் அவரை இழிவுபடுத்தியும் எழுதப்பட்ட பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரரை இழிவுபடுத்தும் பதிவுகளை நீக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளோம். எங்களுடைய விதிமுறைகளுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம். சமூகவலைத்தளங்களில் தொல்லைகளில் இருந்து பிரபலங்களைப் பாதுகாப்பது தொடர்பான எங்களுடைய விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவந்துள்ளோம் என்று ஃபேஸ்புக்கின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.
newstm.in

