சவர்மாவுக்கு அடுத்து உயிரை பறித்த மோமோஸ் !!
சவர்மாவுக்கு அடுத்து உயிரை பறித்த மோமோஸ் !!

நாம் சாப்பிடும் உணவை மென்று சாப்பிட வேண்டும். இல்லையெனில் எவ்வளவு பெரிய ஆபத்துகளை ஏற்படுத்தும் என்பதை இந்த செய்தி உணர்த்துகிறது. புரோட்டா, தேங்காய் துண்டு, சிக்கன் துண்டு தொண்டையில் சிக்கி சிலர் உயிரிந்த செய்தியை கேள்விபட்டிருப்போம். அண்மையில் சவர்மா சாப்பிட்ட ஒருவர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து சவர்மா கடைகளில் உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். கேரளாவில் இளம்பெண் உயிரிழந்தாலும் தமிழகத்தில் பெரியளவில் சோதனை நடத்தப்படும் அளவுக்கு எதிரொலித்தது. இந்த சூழலில் தற்போது ஒருவர் மோமோ சாப்பிட்டு உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

தெற்கு டெல்லியில் 50 வயது முதியவர் ஒருவர் உணவகத்தில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனர். எனினும் அவர் உயிரிழந்ததால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர்கள், அந்த நபரின் உணவுக் குழாயில் மோமோஸ் சிக்கியிருப்பதை கண்டுபிடித்ததாக எய்ம்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அரிதாக ஏற்படும் மரணம் என்றும், 12 லட்சத்தில் ஒருவர் மட்டுமே உணவுக்குழாயில் உணவு சிக்குவதால் இறப்பதாக கூறப்படுகிறது.
மேலும் அந்த நபர் மோமோஸ் சாப்பிடும் போது மதுபோதையில் இருந்ததாக எய்ம்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோமோஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்ததாகவும், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் அவரை காப்பாற்ற முடியவில்லை என்றும் அறிக்கை கூறுகிறது.

அதாவது, மோமோஸை மெல்லாமல் அப்படியே விழுங்கியதால் அது மூச்சுக்குழாயில் சென்று அடைத்துக்கொண்டதாலேயே அவர் உயிரிழந்துள்ளார் என எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருப்பது தொடர்பாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். நன்றாக மென்று சாப்பிடும்போது உமிழ்நீர் கலந்து மாவுச்சத்து சர்க்கரையாக மாறும். எந்த ஓர் உணவாக இருந்தாலும் அதை வாயில் வைக்கும்போது மட்டும்தான் அதன் சுவை தெரிய வேண்டும். பின்னர், அதன் சுவையே மாறிப்போகுமளவுக்கு மென்ற பிறகே, அதை விழுங்க வேண்டும்.
சிக்கன், மோமோஸ், சிறிய உருளைக்கிழங்கு, முட்டை போன்ற வழுவழுப்பான உணவுப்பொருள்களை அப்படியே விழுங்க முயன்றால் அது மூச்சுக்குழாயில் சென்று அடைத்துக்கொள்ளும் வாய்ப்பு அதிக அளவில் இருக்கிறது.

சரி அப்படி உணவு அடைத்து மூச்சடைப்பு ஏற்படுபவர்களை எப்படி காப்பாற்றுவது?
அவர்களை முதுகுப்பக்கமாகத் தாங்கி வயிற்றை இறுக்கமாக அழுத்த வேண்டும். இந்த முறைக்கு Heimlich Maneuver என்று பெயர். இச்சிகிச்சையால் உயிர் பிழைத்தவர்கள் அதிகம். பொதுமக்கள் அனைவரும் இந்த முறையைக் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். அண்மையில் கோவையில் போலீசார் ஒருவர் சிக்கன் தொண்டையில் சிக்கிகொண்டு தவித்தார். துரிதமாக செயல்பட்ட சக காவலர் அவரை பின்பக்கமாக நின்று வயிற்றை இறுக்கமாக பிடித்து தூக்கி குலுக்கினார். இதனால் அவர் இயல்பு நிலைக்கு திரும்பிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதனையே நாம் பயிற்சியாக எடுத்துக்கொள்ளலாம்.
newstm.in

