குரங்கு அம்மை அந்த நோய் அல்ல.. அமைச்சர் சொன்ன ஆறுதல் தகவல்..!
குரங்கு அம்மை அந்த நோய் அல்ல.. அமைச்சர் சொன்ன ஆறுதல் தகவல்..!

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவதால் கன்னியாகுமரி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது.
நிலப்பரப்பு அதிகம் உள்ள மருத்துவமனை இங்கு தேவை உள்ளது. இங்கு, பிரேத பரிசோதனை கூடம் அமைக்கவும், நிரந்தர ஆம்புலன்ஸ் வசதி செய்யவும் ஏற்பாடு செய்யப்படும்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வந்த நிலையில் பல்வேறு நாடுகளில் தற்போது குரங்கம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்தான அச்சம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால், இது தொற்று நோய் இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால், குரங்கம்மை குறித்து மக்கள் பதற்றப்பட வேண்டாம்.
குரங்கம்மை பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான நிலையங்களில் கண்காணிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு அறிகுறிகள் தென்பட்டால் அவர்களது ரத்த மாதிரிகள் புனேயில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை” எனத் தெரிவித்தார்.

