மகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை.. ஜோதிடத்தால் நேர்ந்த சோகம் !!
மகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை.. ஜோதிடத்தால் நேர்ந்த சோகம் !!

வீட்டில் மகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை துடியலூர் அருகே அப்பநாயக்கன்பாளையம் ஜல்லிகாட்டை சேர்ந்தவர் தனலட்சுமி (58). இவரது கணவர் 11 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மகன் சசிக்குமார் (32), மனைவியை பிரிந்து சரவணம்பட்டியில் தனியாக வசிக்கிறார். மகள் சுகன்யா (30) உடல் நிலை பாதிக்கப்பட்டவர். இவரை தனலட்சுமி கவனித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மகன் சசிகுமாரிடம் செல்போனில் பேசிய தனலட்சுமி, நான் இன்று ஜோதிடம் பார்த்தேன். எனக்கு நேரம் சரி இல்லாததால் கை, கால் வராமல் போய்விடும் என்று ஜோதிடர் சொன்னார். நான் படுத்துவிட்டால் தங்கையை கவனிக்க ஆள் இல்லாமல் போய்விடும், என்று கூறி அழுதுள்ளார். அப்போது தாய்க்கு சசிக்குமார் ஆறுதல் கூறியுள்ளார்.
இந்த நிலையில், அதற்கு மறுநாள் அதாவது நேற்று காலை சசிக்குமார் தனது தாய்க்கு பலமுறை போன் செய்தும் எடுக்கவில்லை. இதனால் பதற்றம் அடைந்த அவர், எதிர் வீட்டில் வசிப்பவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு, வீட்டில் பார்க்கும்படி கூறியுள்ளார். எதிர்வீட்டினர் சென்று பார்த்தபோது, தனலட்சுமி தூக்கில் சடலமாக தொங்குவதை தெரிந்து தகவல் கொடுத்தார்.

உடனடியாக சசிகுமார் வந்து பார்த்தபோது சுகன்யாவும் இறந்து கிடந்தது தெரிந்தது. இது குறித்து துடியலூர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சுகன்யாவுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் தனலட்சுமி தற்கொலை செய்தது தெரியவந்தது. உடல்நலம் பாதிக்கப்படும் என ஜோதிடர் கூறியதால் இந்த சோக முடிவை அவர் எடுத்தாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
ஒரே இரவில் வீட்டில் மகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

