3 நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும் !!
3 நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும் !!

பிக்பாஸ் தமிழ் மூலம் மிகவும் பிரபலமானவர் ரைசா வில்சன். அதனைத் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் கடந்த 18ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகார் ஒன்றை தெரிவித்திருந்தார்.
அதில், தோல் மருத்துவர் டாக்டர் பைரவி தனக்கு தேவையில்லாத சிகிச்சையை வலுக் கட்டாயமாக அளித்தார் என குற்றம் சாட்டினார். அதனால் தற்போது முகம் வீங்கி இருப்பதாக தன்னுடயை புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். இது குறித்து மருத்துவர் பைரவியை சந்திக்க முயன்ற போது அவர் பார்க்க மறுத்துவிட்டார் என்றும் அவரது உதவியாளர்கள் அவர் சென்னையில் இல்லை என்று கூறியதாகவும் ரைசா பதிவிட்டிருந்தார்.அவரது இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தனக்கு ஏற்பட்ட விளைவுகளுக்குத் தவறான சிகிச்சையே காரணம் என்பதால் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி ரைசா வில்சன், தோல் சிகிச்சை மருத்துவருக்குத் தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்நிலையில் திடீர் திருப்பமாக தோல் சிகிச்சை மருத்துவரும் பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ரைசாவின் குற்றச்சாட்டுக்கு மருத்துவர் பைரவி செந்தில் மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பக்கமும் சீரான அளவில் இல்லாத முக அமைப்பை, சீர் செய்யும் Dermal Fillers என்ற சிகிச்சையே ரைசாவிற்கு அளிக்கப்பட்டது என்றும், அவர் ஏற்கனவே ஒருமுறை இந்த சிகிச்சையை எடுத்துக் கொண்டவர் தான் என கூறியுள்ளார்.இந்த சிகிச்சையில் முகம் ஒரு வாரம் வீங்கிதான் இருக்கும் என்றும், அதனைப் பயன்படுத்தி ரைசா வில்சன் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக மருத்துவர் பைரவி செந்தில் விளக்கம் அளித்துள்ளார். தோல் மருத்துவர் பைரவி செந்தில் திரைத்துறையினர் மத்தியில் மிகவும் பிரபலம். பலரும் தோல் சிகிச்சைக்காக அவரை அணுகி முகப்பொலிவை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிகிச்சை குறித்து உண்மைக்குப் புறம்பான அவதூறான கருத்துகளை ரைசா வில்சன் வெளியிட்டு வருவதாகவும், மக்கள் மத்தியில் தனக்குள்ள நற்பெயரைச் சீர்குலைக்கும் நோக்கில் ரைசா நாடகம் ஆடுவதாகவும் மருத்துவர் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.இதனையடுத்து அவர் 3 நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அதை சமூக வலைதளங்களில் ரைசா வில்சன் வெளியிட வேண்டும் என்றும் மன்னிப்பு கேட்காவிட்டால் மான நஷ்ட ஈடு கோரி வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தோல் சிகிச்சை மருத்துவரின் வழக்கறிஞர் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த கட்டமாக ரைசா மன்னிப்பு கேட்பாரா? அல்லது மான நஷ்ட வழக்கை சந்திப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

