அதிமுக பொறுப்பிலிருந்து நவநீதகிருஷ்ணன் விடுவிப்பு.. காரணம் என்ன தெரியுமா..?
அதிமுக பொறுப்பிலிருந்து நவநீதகிருஷ்ணன் விடுவிப்பு.. காரணம் என்ன தெரியுமா..?

அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பவர் நவநீதகிருஷ்ணன். இவர் அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.
இதற்கிடையில், திமுக எம்பியும், அக்கட்சியின் செய்தித் தொடர்பு செயலாளருமான இளங்கோவன் மகள் திருமணம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது. தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இந்த திருமணத்தை நடத்தி வைத்தார்.
அந்த திருமண நிகழ்ச்சியில் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின்போது பேசிய நவநீதகிருஷ்ணன், “மாநிலங்களவைக்கு நான் சென்றபோது எனக்கு பல விஷயங்கள் தெரியாது. அப்போது, திமுக எம்பிக்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், கனிமொழி உள்ளிட்டோர் எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்தனர்” என்றார்.
திமுக தலைமையிடமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன், திமுக எம்பிக்களை இவ்வாறு புகழ்ந்து பேசிய நிகழ்வு தமிழக அரசியலில் பெரும் பேசு பொருளானது.
இந்நிலையில், அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து நவநீதகிருஷ்ணன் நீக்கப்படுவதாக அதிமுக தலைமை இன்று அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருக்கும் நவநீதகிருஷ்ணன் எம்பி இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

