ஒருவழியாக திருமண தேதியை முடிவு செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்: விரைவில் அறிவிப்பு..!
ஒருவழியாக திருமண தேதியை முடிவு செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்: விரைவில் அறிவிப்பு..!

நீண்ட ஆண்டுகளாக காதலித்து வரும் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் திருமண தேதியை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருமணத்திற்கு தயாராகி வந்த நயன்தாராவுக்கு காதல் தோல்வி ஏற்பட்டதால் மீண்டும் சினிமாவுக்கு திரும்பினார். அப்போது அவர் நடித்த ‘நானும் ரௌடிதான்’ படம் தமிழ் சினிமா காணாத வரலாறு ஹிட் படைத்தது. அதன்மூலம் அந்த படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நெருங்கி பழக தொடங்கினார் நயன்தாரா.

அது விரைவிலேயே காதலாக மாறியது. எனினும், அந்த செய்தியை அவர்கள் இருவரும் உறுதிப்படுத்தாமல் இருந்தனர். நயன்தாராவுடன் காதல் குறித்த கேள்விக்கு, ”எனக்கு அவர் நல்ல தோழி” என்று மட்டும் பதிலுரைத்தார் விக்னேஷ் சிவன்.
அப்போது பிரபல கார்பரேட் நிறுவனம் நடத்திய பெண்கள் முன்னேற்றம் குறித்த நிகழ்ச்சியில் பங்குகொண்ட நயன்தாராவுக்கு விருது வழங்கப்பட்டது. அதற்காக அவர் நன்றி தெரிவித்த போது, விரைவில் நான் மணக்க இருக்கும் என்னுடைய காதலருக்கும் நன்றி கூறிக்கொள்வதாக அந்நிகழ்ச்சியில் நயன்தாரா கூறினார்.
இதை தொடர்ந்து விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா காதல் உறுதி செய்யப்பட்டது. மேலும், நயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை இணையதளங்களில் பதிவேற்ற தொடங்கினார் விக்னேஷ் சிவன். இவர்களுடைய காதலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது.

எனினும், இவர்கள் திருமணம் குறித்த எந்தவித அறிவிப்பும் இல்லாமல் வெறும் காதலர்களாக மட்டுமே இருந்து வருகின்றனர். அதனால் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது என்கிற கேள்வி பரவலாக சினிமா உலகில் கேட்கப்பட்டு வருகிறது. இருவீட்டாருடைய சம்மதம் இருக்கும் நிலையிலும், திருமணத்தை இருவருமே தாமதித்து வருகின்றனர்.
இந்நிலையில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் வரும் மார்ச் மாதத்தில் திருமணம் செய்யவுள்ளதாக சொல்லப்படுகிறது. எளிய முறையில் திருமணம் நடைபெறும் எனவும், வரவேற்பு நிகழ்ச்சி மட்டும் பிரபல நட்சத்திர விடுதியில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.
தற்போது விக்னேஷ் சிவன் விஜய் சேதுபதி நடிப்பில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதில் நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விரைவிலேயே இந்த படத்தின் பணிகள் முடிக்கப்பட்டு, திருமண தேதியை அவர்கள் இருவரும் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

