மாணவர்களுக்காக புதிய திட்டம்.. ஆசிரியர்களுக்கு அரசு அறிவுறுத்தல் !!
மாணவர்களுக்காக புதிய திட்டம்.. ஆசிரியர்களுக்கு அரசு அறிவுறுத்தல் !!

இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வில், வினாத்தாள் 'லீக்' ஆகாமல் தடுக்க தமிழக பள்ளிக் கல்வித் துறை சிறப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் காரணமாக, கடந்த ஜனவரி மாதம் முழுதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. குறைந்த நாளிலேயே உச்சம்தொட்ட கொரோனா பாதிப்பு அதன்பின்னர் படிப்படியாக குறைந்தது. இதனையடுத்து, பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, ஒமைக்ரான் பரவல் காரணமாக, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் நடைபெற இருந்த திருப்புதல் தேர்வு, பிப்ரவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டு நடத்தப்பட்டது. அப்போது, திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்கூட்டியே சமூக வலைதளங்களில் லீக் ஆகியது. இது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள் செல்வம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வில், வினாத்தாள் 'லீக்' ஆகாமல் தடுக்க, மூன்று வகை வினாத்தாள்கள் தயாரிக்க, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு, வரும் 28 ஆம் தேதி துவங்கி, ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி முடிகிறது. இந்த தேர்வில் வினாத்தாள்கள் லீக் ஆகாமல் தடுக்க, பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதாவது, மூன்று விதமான வினாத்தாள்களை தயாரித்து கடைசி நேரத்தில் எந்த வினாத்தாளை வழங்க வேண்டும் என பள்ளிகளுக்கு அறிவிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஒருவேளை ஒரு வினாத்தாள் லீக் ஆனால், மாற்று வினாத்தாளை தேர்வில் வழங்க முடிவு செய்துள்ளனர். அதே நேரம், மூன்று வகை வினாத்தாள்களும் ஒரே நேரத்தில் வெளியாகாமல் இருக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
newstm.in

