இனி, வீட்டில் இருந்தே பால் அட்டையை பெறலாம்.. ஆவினில் புதிய வசதி அறிமுகம்..!
இனி, வீட்டில் இருந்தே பால் அட்டையை பெறலாம்.. ஆவினில் புதிய வசதி அறிமுகம்..!

பால் அட்டையை வீட்டில் இருந்தபடியே பெறும் புதிய வசதியை ஆவின் நிர்வாகம் இணைய தளத்தில் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு கட்டணமாக 10 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘சென்னையில் சுமாா் 6 லட்சம் குடும்பங்கள் மாதந்தோறும் பால் அட்டையை சலுகை விலையில் பெற்று பயன் அடைந்து வருகின்றன.
அனைத்து பொதுமக்களும் இத்தகைய சலுகையைப் பெற ஆவின் வட்டார அலுவலகங்கள், பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள், ஆவின் அதிநவீன பாலகங்கள் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
ஆவின் பால் அட்டையைப் பெற ஏதேனும் ஓர் அடையாள அட்டையை விண்ணப்பத்துடன் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். அவர்களுக்கு உடனடியாக பால் அட்டை வழங்கப்படும்.
பாலகங்களில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு மட்டும் மறுநாள் ஆவின் வட்டார அலுவலர்கள் மூலம் பால் அட்டை அளிக்கப்படும்.
அத்துடன், இணையதளம் வாயிலாகவும் புதிய பால் அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு கட்டணமாக 10 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த வசதி சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 27 ஆவின் மண்டலங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த முறையில் பொது மக்களுக்கு மட்டுமே பால் அட்டை வழங்கப்படும்; தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட மாட்டாது. ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது, ‘வீட்டுக்கு கொண்டுவந்து அளிக்க விரும்புகிறீர்களா’ என்ற பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. அதை டிக் செய்தால் போதும். வீட்டிற்கே பால் அட்டை வந்து சேரும்.
நுகர்வோர்கள் பால் அட்டை சலுகை குறித்த தங்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை 1800 425 3300 என்ற கட்டணமில்லாத தொலைபேசி மூலமாக தெரிவிக்கலாம்.
பண்டிகை நாட்களில் பால் மற்றும் பால் உபபொருட்களின் முன்பதிவு குறித்த தகவல்களை 044 - 2346 4578, 2346 4579, 2346 4580 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

