மாணவர்கள் பயன்பெற ஏராளமான திட்டங்கள்.. பட்டமளிப்பு விழாவில் முதல்வர் பேச்சு..!
மாணவர்கள் பயன்பெற ஏராளமான திட்டங்கள்.. பட்டமளிப்பு விழாவில் முதல்வர் பேச்சு..!

சென்னை பல்கலைக் கழகத்தின் 164 வது பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது: “தமிழகத்திற்கு மட்டுமல்ல, உலகின் வளர்ச்சிக்கு உதவியவர்களை உருவாக்கியது சென்னை பல்கலைக்கழகம்.
அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என சிறப்பு வாய்ந்தவர்களை இந்த பல்கலைக்கழகம் உருவாக்கி உள்ளது. திருநங்கைகளுக்கு இலவச கல்வி அளிக்கும் பல்கலைக்கழகத்தின் செயல்பாடு மிகவும் பாராட்டுக்குரியது.
திமுக அரசு, மாணவர்களுக்கான அரசு என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான அரசு. நிதிப்பற்றாக்குறை இருந்தபோதிலும் மாணவர்கள் நலன் கருதி உதவித்தொகைகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம்.
உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஏழை மாணவர்கள் பயன்பெற ஏராளமான திட்டங்கள் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்படுகின்றன.
வேலைக்கு தகுந்தாற்போல இளைஞர்கள் கிடைக்கவில்லை என்று பல்வேறு நிறுவனங்கள் கூறுகின்றன. அனைத்து மாணவர்களையும் முதல்வனாக உருவாக்க செயல்படுத்தப்பட்ட திட்டம் தான் முதல்வன் திட்டம். வேலைகள் இருக்கின்றன, திறன் குறைவாக இருக்கிறது; அதை சரி செய்யவே நான் முதல்வன் திட்டம்.
மாணவர்களின் அடுத்தடுத்த உயர்வுக்கு பட்டம் என்பது ஒரு அடித்தளம். படிப்பு இறுதி வரை தொடர வேண்டும். மாணவர்களின் திறமை, தகுதிக்கேற்ப எதிர்காலம் நிச்சயம் அமையும் என நம்பிக்கை உள்ளது.
பெற்றோர்களின் எண்ணங்களை மாணவர்கள் நிச்சயம் நிறைவேற்றுவார்கள். தமிழக மாணவர்கள் மேன்மை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது எனது ஆசை” என்று அவர் கூறினார்.

