ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அரசு பதவி..!
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அரசு பதவி..!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தின் நீதி பரிபாலன குழு உறுப்பினராக அதிமுக எம்பி ரவீந்தர நாத் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், 3 ஆண்டுகள் இவர் இந்தப் பதவியில் இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரவீந்திரநாத் குமார். முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான இவர், தேர்தல் முடிந்தவுடன் அமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவார் என்று எதிர்பார்ப்பக்கப்பட்டது.
ஆனால், அப்போது அவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்காமல் போனது. இந்நிலையில், சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போதும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாத நிலையில், தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாதது குறித்து பலவகையான கருத்துக்கள் வெளியான நிலையில், தனது மகனுக்கு அமைச்சர் பதவி கொடுப்பது பாஜகவின் விருப்பம் என்று சமீபத்தில் ஒ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 26ம் தேதி டில்லி சென்ற ஒ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர், எம்பி ரவீந்திரநாத் குமாருடன் சென்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினர்.
இதனைத் தொடர்ந்து மத்திய அரசு சார்பில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தின் நீதி பரிபாலன குழு உறுப்பினராக ரவீந்திரநாத் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செம்மஞ்சேரியில் செயல்பட்டு வரும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்திற்கு கொச்சி, கொல்கத்தா, மும்பை, நவி மும்பை, விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் வளாகங்கள் உள்ளன. இந்த பல்கலைகழகத்தில் கடல்சார் போக்குவரத்துத் துறை பற்றிய கல்வித்திட்டங்களை வகுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய கடல்சார் பல்கலைக்கழகத்தின் நீதி பரிபாலன குழு உறுப்பினராக ரவீந்திரநாத் குமார் எம்பி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவருடன் திமுக எம்பி தயாநிதி மாறனும் இப்பல்கலைக்கழகத்தின் நீதி பரிபாலன குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.