மூட்டை மூட்டையாக சிக்கிய ரேஷன் அரிசி - அதிகாரிகள் அதிர்ச்சி
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார், அரசுப் பேருந்து மோதியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் மின்னூர் பகுதியில் இந்த விபத்து நடைபெற்றது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கிய லாரியில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து ஆம்பூர் வட்டாசியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வட்டாட்சியர் செண்பகவள்ளி தலைமையில் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு 2 லாரிகளில் ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வருவாய்த்துறையினர் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் விபத்து என்பதால் லாரியை பறிமுதல் செய்ய ஒப்புக்கொள்ள முடியாது என காவல்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து உயரதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆம்பூர் துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தன், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை உதவி ஆய்வாளர் முத்தமிழ்ச் செல்வன் ஆகியஇருவரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். ரேஷன் அரிசி ஏற்றி வந்த 2 லாரிகளை காவல்துறை கையகப்படுத்தும் என்றும், விபத்து வழக்கை ஆம்பூர் காவல்துறையும், அரிசி கடத்தல் வழக்கை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையும் நடத்தும் என முடிவெடுக்கப்பட்டது.

இரண்டு லாரிகளில் இருந்து சுமார் 50 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து லாரி ஓட்டுனர்கள் 2 பேர் கைது செய்து தாலுக்கா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in