ஒகேனக்கல் போகாதீங்க.. சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை..!
ஒகேனக்கல் போகாதீங்க.. சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை..!

நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து 16 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளதால் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஒகேனக்கல் அருவி தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஒகேனக்கல் பகுதிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து ஒகேனக்கல் பிரதான அருவி, சினி அருவிகளில் குளித்து, பரிசல் பயணம் செய்து மகிழ்வர்.
இந்த சூழலில், கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், நீர்வரத்து அதிகரிப்பால் ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அருவிக்கு வரும் நீர்வரத்து 16 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளதால் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

