ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம்! முதல்வர் அதிரடி அறிவிப்பு!
ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம்! முதல்வர் அதிரடி அறிவிப்பு!

மத்திய அரசு ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி வரும் 16 -ம் தேதி ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்ப பெறக் கோரி போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம், முதலியார்பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமை தாங்கினார். முதல்வர் நாராயணசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்ப பெற கோரி கடந்த 26-ம் தேதி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. ஆனால், மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆளுநர் கிரண்பேடியும் தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. எனவே கிரண்பேடியை கண்டித்து வரும் வெள்ளிக்கிழமை அண்ணாசிலை அருகில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம்.

மேலும், குடியரசுத் தலைவரை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். அவர் வரும் 10-ம் தேதி நேரம் ஒதுக்கியுள்ளார். அன்றைய தினம் டெல்லி சென்று அவரை சந்தித்து கையெழுத்து இயக்கத்தின் மூலம் பெறப்பட்ட கையெழுத்துகளை ஒப்படைக்க உள்ளோம். புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு ஆளுநர் கிரண்பேடி தடையாக இருந்து வருவதை ஆதாரத்துடன் சமர்பிக்க உள்ளோம். அப்போது, மத்திய அரசு ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் அளிக்க உள்ளோம் என்றார்.
துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 16 -ம் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டம் குறித்தும் பொதுமக்களிடம் விளக்கம் அளிக்க வரும் 14 மற்றும் 15 -ம் தேதிகளில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் தெருமுனை பிரசாரம் செய்ய உள்ளோம் என்றார்.

