புதுச்சேரி தவில் வித்வானுக்கு பத்மஸ்ரீ விருது!!
புதுச்சேரி தவில் வித்வானுக்கு பத்மஸ்ரீ விருது!!

புதுச்சேரியை சேர்ந்த தவில் வித்வான் முருகையனுக்கு (58) பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, சிறந்த முறையில் பணியாற்றிய 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் - தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படும்.
இந்தாண்டுக்கான விருதுகள் பெறுவோர் பட்டியலை, மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முன்னாள் முப்படை தளபதி பிபின் ராவத், மறைந்த முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உள்ளிட்ட 4 பேருக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா, மேற்குவங்க முன்னாள் முதல்வர் புத்ததெப் பட்டாசர்ஜி உள்ளிட்ட 17 பேர் பத்ம பூஷன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் உட்பட 107 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் சிற்பி பாலசுப்ரமணியம், நடிகை சௌகார் ஜானகி, ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியா, பிரபல பின்னணி பாடகர் சோனு நிகாம், பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெகரா உள்ளிட்டோர் பத்மஸ்ரீ விருத பெற உள்ளனர்.

அதே போல், புதுச்சேரியை சேர்ந்த தவில் வித்வான் முருகையனுக்கு (58) பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தொடக்கத்தில் தந்தை விவேகானந்தனிடம் தவில் கற்கத் தொடங்கி, பின்னர் வளையப்பட்டி பத்மஸ்ரீ சுப்ரமணியத்தை குருவாக ஏற்று கலையின் நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டார்.
அகில இந்திய வானொலியில் ஏ பிளஸ் கிரேட் கலைஞராக உள்ள முருகையன், தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். விழுப்புரம் அரசு இசைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் இவர், தனது 23 ஆண்டு கால பணியில் 300க்கும் மேற்பட்ட கலைஞர்களை உருவாக்கியுள்ளார்.

நலிவடைந்த நிலைக்கு தள்ளப்பட்டு வரும் தவில், நாதஸ்வரம் கலைஞர்களுக்கு அரசும், மக்களும் ஆதரவளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
newstm.in

