பாகிஸ்தான் கிரிக்கெட்டை அழித்துவிட்டது நியூசிலாந்து: அக்தர் காட்டம் !
பாகிஸ்தான் கிரிக்கெட்டை அழித்துவிட்டது நியூசிலாந்து: அக்தர் காட்டம் !

பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் போட்டிகளை இறுதி நிமிடத்தில் ரத்து செய்ததன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட்டை நியூசிலாந்து அழித்துவிட்டதாக சோயிப் அக்தர் விமரிசனம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் மூன்று ஒருநாள், 5 டி20 ஆட்டங்களை விளையாடத் திட்டமிட்டு பாகிஸ்தானுக்கு வந்தது நியூசிலாந்து அணி. 18 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்வதால் இந்தத் தொடர் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது.

முதல் ஒருநாள் ஆட்டம் இன்று நடைபெற இருந்தது. ஆனால், ஆட்டம் தொடங்க சில நிமிடங்கள் வரை இரு அணி வீரர்களும் மைதானத்துக்கு வரவில்லை, ரசிகர்களும் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அசாதாரணமான சூழல் நிலவியது.
இந்நிலையில் பாகிஸ்தானில் விளையாடவிருந்த ஒருநாள், டி20 தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தகவல் அளித்தது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்கிறோம். நியூசிலாந்து அணி வீரர்கள் உடனடியாக நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்படும் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம், தொடர் ரத்தானது குறித்து அறிக்கை வெளியிட்டது.

இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். தொடரை திடீரென ரத்து செய்த நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக சாடியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர், பாகிஸ்தான் கிரிக்கெட்டை நியூசிலாந்து அழித்துவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், மேற்கிந்திய தீவுகள், இலங்கை, ஜிம்பாவே உள்ளிட்ட அணிகளுடனான போட்டிகளை பாதுகாப்பாக பாகிஸ்தான் நடத்தியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாது நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது. இன்றைய அச்சுறுத்தல் உறுதிப்படுத்தப்படாத ஒன்று. இதுகுறித்து விவாதித்திருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
newstm.in

