பனமரத்துப்பட்டியில் பரபரப்பு.. கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் கவுன்சிலர்கள் திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்!
பனமரத்துப்பட்டியில் பரபரப்பு.. கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் கவுன்சிலர்கள் திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்!

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவராக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த ஜெகநாதன். ஊராட்சி மன்றத்தில் 6 அதிமுக உறுப்பினர்களும். திமுக உறுப்பினர்கள் 5 பேரும், பாமக - கம்யூனிஸ்ட் தலா 1 உறுப்பினர் என மொத்தம் 13 உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்நிலையில், இன்று பனமரத்துப்பட்டி ஊராட்சி மன்ற கூட்டம் நடைபெற இருந்தது. இந்தக் கூட்டத்தில் அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் ஜெகநாதன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட இருந்தது.
இதன் காரணமாக, ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன் தனது ஆதரவாளர் மற்றும் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களுடன் ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள கூடுதுறையில் குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்ய காரில் வந்தார்.
அப்பொழுது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள கத்தேரி பிரிவு தேசிய நெடுஞ்சாலையில் போலீசாரின் தடுப்பு வேலிகளை சாலையின் குறுக்கே வைத்து பயங்கர ஆயுதங்களுடன் வழி மறித்த 20 பேர் கொண்ட கும்பல் காரில் இருந்த 5 வது வார்டு உறுப்பினர் சங்கீதா, 8 வது வார்டு உறுப்பினர் பூங்கொடி ஆகியோரை குண்டு கட்டாக தூக்கி தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்றதாக இணையதளங்களில் செய்தி பரவியது. இதையடுத்து பனமரத்துப்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டது..
பின்னர், இந்த செய்தி வதந்தியாக பரவியது என்று கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் கவுன்சிலர்கள் பேட்டியளித்தனர். பனமரத்துப்பட்டி ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதனுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றது. கடத்தப்பட்டதாக கூறப்பட்ட அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் இருவரும் திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

