6 மாதமாக அவதிப்பட்ட நோயாளி.. 1 மணி நேரத்தில் 206 கற்களை அகற்றிய டாக்டர்கள்..!
6 மாதமாக அவதிப்பட்ட நோயாளி.. 1 மணி நேரத்தில் 206 கற்களை அகற்றிய டாக்டர்கள்..!

தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் வீரமல்லா ராமலட்சுமையா (56). இவர், ஹைதராபாத் நகரில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு சென்று, “கடந்த 6 மாதங்களாக இடுப்புக்கு சற்று மேலே இடது பக்கத்தில் கடுமையான வலி உள்ளது. கோடை காலத்தில் வெப்பநிலை உயரும் போது இந்த வலி அதிகரிக்கிறது” எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து டாக்டர்கள், அவருடைய கடந்த கால மருத்துவ குறிப்புகளை வாங்கி பார்த்துள்ளனர். அதில், உள்ளூரில் உள்ள சுகாதார பயிற்சியாளர் ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் சில மருந்துகளை வாங்கி ராமலட்சுமையா சாப்பிட்டுள்ளார். அது குறுகிய காலத்திற்கு நிவாரணம் தந்துள்ளது. ஆனால், தொடர்ந்து வலி ஏற்பட்டு அன்றாட வேலைகளில் பாதிப்பை ஏற்படுத்தியது.
அதன் பின்னர் டாக்டர்கள் அவருக்கு ஆரம்பகட்ட பரிசோதனைகள் செய்துள்ளனர். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். அதில், அவரது இடது புற சிறுநீரகத்தில் கற்கள் இருந்துள்ளன. இதை சி.டி. கப் ஸ்கேனும் உறுதி செய்தது.
அதன் பின்பு ராமலட்சுமையாவுக்கு கவுன்சிலிங் வழங்கி, அதன் பின்னர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஒரு மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையில், அவருடைய சிறுநீரகத்தில் இருந்து 206 கற்கள் அகற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து அவர் உடல்நலம் தேறி வீடு திரும்பினார்.

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், ‘கோடை காலங்களில், உயர்ந்து வரும் வெப்பநிலையால், பலருக்கும் நீரிழப்பு ஏற்படுகிறது. இது, சிறுநீரகங்களில் கற்களாக உருமாறி விடுகிறது. அதனால், அதிக அளவு நீர் அருந்த வேண்டும். முடிந்தால், இளநீர் அருந்த வேண்டும்’ என்றனர்.
Next Story

