மக்களே கவனம்.. ரசாயன மாம்பழங்கள் விற்பனை.. 1200 கிலோ பறிமுதல்..!
மக்களே கவனம்.. ரசாயன மாம்பழங்கள் விற்பனை.. 1200 கிலோ பறிமுதல்..!

திருச்சி பழைய ஈ.பி.ரோட்டில் உள்ள மாம்பழ கடைகளில் ரசாயனம் தடவிய மாம்பழங்கள் விற்பனை செய்வதாக திருச்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, திருச்சி மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ் பாபு தலைமையிலான அதிகாரிகள் திடீரென அங்குள்ள மாம்பழ கடைகளில் ஆய்வு நடத்தினர். அப்போது, ரசாயனம் தடவிய சுமார் 1200 கிலோ மாம்பழங்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ் பாபு கூறியதாவது; “செயற்கை முறையில் ரசாயன மருந்து தெளித்து பழுக்க வைத்த பழங்களை பொதுமக்கள் உண்ணும் போது அவர்களுக்கு வயிற்றில் எரிச்சல், வயிற்றுப் போக்கு, காய்ச்சல் மற்றும் தொடர்ச்சியாக உட்கொள்ளும் போது புற்றுநோய் வருவதற்கான காரணமாக அமைந்துவிடும்.
அதனால், வணிகர்களும் பொதுமக்களும் இதுபோன்ற பழங்களை விற்கவோ வாங்கவோ கூடாது. மேலும் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் வியாபாரிகள் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்று வருங்காலங்களில் திருச்சி மாவட்டத்தில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்கள் அனைத்தும் அரியமங்கலம் குப்பை கிடங்கு பகுதிக்கு கொண்டு சென்று அழிக்கப்பட்டது.

