பாடப் புத்தக்கத்தில் பெரியார், நாராயண குரு தகவல்கள் நீக்கப்பட்டதால் பெரும் சர்ச்சை..!!
பாடப் புத்தக்கத்தில் பெரியார், நாராயண குரு தகவல்கள் நீக்கப்பட்டதால் பெரும் சர்ச்சை..!!

10-ம் வகுப்பு சமூக அறிவியல் புதிய பாடப் புத்தக்கத்தில் பெரியார், நாராயண குரு குறித்த தகவல்கள் நீக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கர்நாடக பாடநூல் கழகம் தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள புதிய சமூக அறிவியல் பகுதி-1 பாடப்புத்தகத்தில் சமூக மற்றும் மத சீர்திருத்த இயக்கங்கள் பற்றிய அத்தியாயம் 5 இல் ராஜா ராம் மோகன் ராய் நிறுவிய பிரம்ம சமாஜம், சுவாமி தயானநாத சரஸ்வதியின் ஆரிய சமாஜம், ஆத்மராம் பாண்டுரங்கின் பிரார்த்தனா சமாஜம், ஜோதிபா புலேயின் சத்யசோதன சமாஜம், சர் சையத் அகமது கானின் அலிகார் இயக்கம், ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் சுவாமி விவேகானந்தரின் ராமகிருஷ்ணா மிஷன் மற்றும் அன்னிபெசண்டின் தியோசாபிகல் சொசைட்டி ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆனால் இதன் முந்தைய பதிப்பில் இடம்பெற்றிருந்த நாராயண குரு மற்றும் பெரியார் பற்றிய குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளன.
இவற்றிற்கு கண்டனம் தெரிவித்து தட்சிண கன்னடா மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரான கே.ஹரீஷ் குமார் கூறியதாவது, “இந்த வருடம் ஏப்ரலில் நடைபெற்ற சிவகிரி யாத்திரையின் 90-வது ஆண்டுவிழாவில் ஸ்ரீ நாராயணகுருவின் பிரசங்கங்களை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியது வெறும் நாடகமா..? நாராயணகுரு மற்றும் பெரியார் பற்றிய பாடங்கள் ஒதுக்கப்பட்டது வன்மையாகக் கண்டித்தக்கது. இந்த மாபெரும் சமூகசீர்திருத்த ஆளுமைகளைப் குறித்த பாடங்களை பாஜக அரசு உடனே பாடப்புத்தகத்தில் மீண்டுமாக சேர்க்க வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால் வருகிற நாட்களில் பெரும் விளைவை சந்திக்க வேண்டி இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.ஆர் லோபோ கூறியதாவது “பெரியார் மற்றும் நாராயண குருவின் பகுதிகளை நீக்குவதன் மூலம் சமூக நல்லிணக்கத்திற்காக போராடியவர்களின் நோக்கங்களை மாணவர்களுக்குக் கொண்டு செல்ல கர்நாடகா அரசு மறுக்கிறது” என்று தெரிவித்தார்.
சமூக சீர்திருத்தத்தில் அளப்பரிய பங்காற்றிய இந்த இருவர் பற்றிய பாடங்களும் நீக்கப்பட்டது கர்நாடகாவில் எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளது.

