வீடு கட்ட 60 நாட்களில் அனுமதி..! - அமைச்சர் முத்துசாமி
வீடு கட்ட 60 நாட்களில் அனுமதி..! - அமைச்சர் முத்துசாமி

சென்னை எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் முத்துசாமி, "சிஎம்டிஏ-விற்கு தேவையான அளவிற்கு பணியாளர்கள் இல்லாத காரணத்தால் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளது. காலியிடங்களை நிரப்புவதன் மூலம் ஊழியர்களின் பணிச்சுமை குறையும்.
சிஎம்டிஏ-வை அணுகும் யாராக இருந்தாலும், சட்டத்திற்கு உட்பட்டு கட்டட வரைபடம் இருந்தால் அவர்களுக்கு 60 நாட்களில் அனுமதி வழங்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், கோயம்பேடு காய்கறி சந்தையை புதுப்பிக்கும் அவசியம் உள்ளது. மழை பெய்தால் தண்ணீர் தேங்குவது, குப்பைகளை அகற்றுவதில் தனி கவனம் செலுத்துவோம். கோயம்பேடு காய்கறி சந்தையில் செவ்வாய்கிழமை நேரில் ஆய்வு செய்யவுள்ளோம்.
முதலமைச்சரின் நீண்ட கால திட்டம் பற்றி இந்தக் கூட்டத்தில் பேசி இருக்கிறோம். முதலமைச்சர் எங்களை சந்திக்கும் போதெல்லாம் மக்களின் குறைகளை எவ்வாறு கேட்டு தெரிந்துள்ளீர்கள் என்று தான் கேட்கிறார்.
மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். பொதுமக்களுக்கு உள்ள பிரச்னைகள் மற்றும் கால தாமதம் விரைவில் சரி செய்யப்படும்” என, அமைச்சர் முத்துசாமி பேசினார்.

