பெட்ரோல், டீசல் விலை ரூ.30 குறைய வாய்ப்பு.. அரசுக்கு ஓபிஎஸ் ஆலோசனை..!
பெட்ரோல், டீசல் விலை ரூ.30 குறைய வாய்ப்பு.. அரசுக்கு ஓபிஎஸ் ஆலோசனை..!

பெட்ரோல் - டீசல் விலையை குறைப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதில், “பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கொரோனா காலத்திலும், அண்மையிலும் கடுமையான வரி உயர்வுகள் காரணமாக முன்பு இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளன.
‘அனைத்துத் தரப்பு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு நான்கு ரூபாயும் குறைக்கப்படும்’ என தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவுடன், அனைத்துத் தரப்பு மக்களின் நலனை தி.மு.க. காற்றில் பறக்கவிட்டு விட்டது.

தி.மு.க. அரசு 7-5-2021 அன்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 93 ரூபாய் 17 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றைக்கு, மாநில அரசால் லிட்டருக்கு மூன்று ரூபாயும், மத்திய அரசால் ஐந்து ரூபாயும் குறைக்கப்பட்ட நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 110 ரூபாய் 85 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 04-04-2018 அன்று, பொதுமக்களின் சுமையை குறைக்கும் வகையில், பெட்ரோலிய பொருட்களை, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி வரம்பின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்.
பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் கொண்டு வர வேண்டியதன் அவசியம் குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 28-06-2018 அன்று தி.மு.க. சார்பில் வெட்டுத் தீர்மானம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றை பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வரம்பிற்குள் கொண்டு வருவதற்கு தி.மு.க. ஆதரவளிக்கும் என்றும், மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களுடைய கருத்து தி.மு.க.வின் கருத்து அல்ல என்றும் சில மாதங்களுக்கு முன் தி.மு.க.வின் பொருளாளரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான திரு. டி.ஆர். பாலு அவர்கள் தெரிவித்து இருந்தார்.
இதிலிருந்து, பெட்ரோல் - டீசல் உள்ளிட்ட பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வருவதில் திமுகவும், மத்திய அரசும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது. இதன்மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை குறைய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மத்திய நிதி அமைச்சருடனும், மற்ற மாநில முதலமைச்சர்களுடனும் கலந்து பேசி பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வந்து அனைத்து தரப்பு மக்களின் நலனைக் காக்க வேண்டும்” என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

