பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.254! எங்கே தெரியுமா?
பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.254! எங்கே தெரியுமா?

இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.254-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா நோய்த்தொற்றைத் தொடர்ந்து ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இலங்கை இன்னும் விடுபடவில்லை. இதனால் இலங்கையின் ஏற்றுமதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. சுற்றுலாக்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் பொருளாதாரம் மிகவும் பாதிப்புக்குள்ளானது.
இந்நிலையில் தற்போது உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலின் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 130 டாலர்களுக்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால், இலங்கையில் எரிபொருள் மற்றும் டீசல் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், நாட்டின் இரண்டாவது பெரிய சில்லறை எரிபொருள் விநியோகஸ்தரான இலங்கை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இலங்கையில் பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்து உத்தரவிட்டது. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.50 ஆக உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.254 ஆகவும், டீசலின் லிட்டருக்கு ரூ. 75 ஆக உயர்ந்து ஒரு லிட்டர் டீசல் ரூ.176 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 16.3 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அந்நியச் செலாவணியின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததால், இலங்கை ரூபாய் மதிப்பும் சரிந்துள்ளது. இதன் காரணமாக, பருப்பு கிலோ ரூ.250, சர்க்கரை ரூ.215, உருளைக்கிழங்கு கிலோ ரூ.300, பெரிய வெங்காயம் கிலோ ரூ.400, உளுந்து கிலோ ரூ.2,000, ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூ.35 அதிகரித்துள்ளது.

மேலும், அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வருவதால், குறிப்பிடத்தக்க எரிபொருள் தட்டுப்பாடு உள்ளது. நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான நிதிப் பற்றாக்குறை காரணமாக, இலங்கையில் தினமும் ஏழரை மணிநேரம் மின்வெட்டு அமலில் உள்ளது.
newstm.in

