பி.எம்.கேர்ஸ் வரவு செலவு கணக்கு காட்டமுடியாது! பிரதமர் அலுவலகம் சொல்லும் காரணம் என்ன தெரியுமா?
பி.எம்.கேர்ஸ் வரவு செலவு கணக்கு காட்டமுடியாது! பிரதமர் அலுவலகம் சொல்லும் காரணம் என்ன தெரியுமா?

பிரதம மந்திரி பெயரில் தொடங்கப்பட்டு, அரசு இலச்சினை, அரசு இணையத்தளம், அரசு சமூகத்தளங்களில் விளம்பரம் என அரசு அமைப்பு போலவே செயல்பட்டு வரும் இந்த நிதி அறக்கட்டளைக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த நிதி அறக்கட்டளைக்கு இது வரை பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட தொகை, செலவு விவரம் உள்ளிட்டவைகளை வெளியிடுமாறு ஆர்.டி.ஐ மூலம் தகவல் கோரப்பட்டது. அப்போது இது தனியார் அறக்கட்டளை, அரசுக்கு சொந்தமானது அல்ல என்ற காரணம் கூறி ஆர்.டி.ஐ தகவல் தர மறுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது பிரதமர் அலுவலகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ”பிஎம் கேர்ஸில் உள்ள நிதி அரசாங்கத்தின் நிதி அல்ல. பிஎம் கேர்ஸ் நிதி அறக்கட்டளை, அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு உருவாக்கப்படவில்லை. எந்தச் சட்டத்தாலும் உருவாக்கப்படவில்லை. மத்திய அரசின் எந்த விவகாரத்துக்கும், செயலிலும் ஒரு பகுதியாக பிஎம் கேர்ஸ் நிதி இல்லை. மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கையால் தணிக்க செய்யவும் முடியாது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெற பிஎம் கேர்ஸ் நிதி பொது அமைப்பு அல்ல,” என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி சென்றுள்ள நேரத்தில் பி.எம்.கேர்ஸ் விவகாரம் பெரிதாக வெடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அரசு அமைப்பு போல் செயல்படும் இந்த நிதி அறக்கட்டளை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். தேர்தல் பத்திரம் போல் இதுவும் மிகப்பெரிய ஊழல் மோசடி என்ற குற்றச்சாட்டுகள் பாஜக மீது முன் வைக்கப்படுகிறது.

