செருப்பு காலுடன் பூஜை: உதயநிதி மன்னிப்பு கேட்கவேண்டும்..!
செருப்பு காலுடன் பூஜை: உதயநிதி மன்னிப்பு கேட்கவேண்டும்..!

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் சென்னையில் நடந்த புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்ட பூமி பூஜையில் செருப்பு காலுடன் உதயநிதி பங்கேற்றதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் கூறுகையில், “சென்னை, வியாசர்பாடி எம்ஜிஆர் நகரில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்ட கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை நடந்தது. தேர்தலுக்கு முன், ‘நான் கடவுள் நம்பிக்கை அற்றவன்' எனப் பேசிய உதயநிதி, காலில் செருப்பு அணிந்து இந்து சமய கடவுள் படங்களை அவமதிக்கும் வகையில் நடந்துள்ளார்.
கருணாநிதி சமாதிக்கு செருப்பு அணியாமல் செல்லும் உதயநிதி மற்றும் அமைச்சர்கள், இந்து கடவுள்களை செருப்பு அணிந்து அவமதித்தது ஏற்க முடியாதது. இதற்கு, உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.
அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி பிரியா கூறுகையில், “தங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றால், பூமி பூஜை நிகழ்வுகளில் கலந்து கொள்வதைத் தவிர்க்கலாம். ஆனால், கடவுளை அவமதிப்பதுபோல காலில் செருப்பு அணிந்து கொண்டு பூஜையில் ஈடுபட்டதை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்றார்.