பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு..!
பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு..!

உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா இந்தியாவிலும் கடந்த ஆண்டு (2020) மார்ச் மாத இறுதியில் பரவ தொடங்கியது. இதன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து புதுவையில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், அனைத்தும் மூடப்பட்டன.
இதற்கிடையில் புதுவையில் கொரோனா 2-வது அலையில், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இதையடுத்து மே மாதம் 24-ந் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது உயிரிழப்பு, பாதிப்பு எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. எனவே ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், புதுவையில் நாளை முதல் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு பெற்றோர் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அமைச்சர் நமசிவாயம் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உடன் ஆலோசனை நடத்தினர்.
அதன்பின், தொற்று குறையாததால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறப்பது தற்போதைக்கு ஒத்தி வைப்பதாகவும், பாதிப்பு குறைந்த பின்பு இது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் அறிவித்தார்.

